×

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

* முருகன் சூரனை வெல்ல படைகளோடு தங்கிய இடம் திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இது இரண்டாவது; ‘குரு’ தலமும் கூட.

* கோயிலினுள் வடக்குப் பிராகாரத்தில் வெங்கடாசலபதி குடைவரை கோயில் ஒன்றும் உள்ளது. வெங்கடாசலபதி பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

* கோயிலின் கருவறைக்குப் பின்னால் இடப்புறம் ஒரு சிறிய வாயில் உள்ளது. அதன் வழியே குனிந்து நுழைந்து சென்றால் மூலவருக்கு வலப்புறம் ஒரு சந்நதியில் காட்சியளிக்கும் பஞ்சலிங்கங்களை தரிசிக்கலாம்.

* கோயில் அருகே கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அதிசயம் நாழிக்கிணறு. இயற்கையான, என்றுமே வற்றாத, தெளிவான, சுவையான நீரூற்று. கடலில் நீராடிய பக்தர்கள் பின்னர் நாழிக்கிணற்றில் நீராடுவர்.

* ஆறுமுக பெருமானுக்கு உதயமார்த்தாண்ட நைவேத்தியம் படைக்கிறார்கள். அதாவது, தோசையும், கஞ்சியும்.

* ஆரம்பத்தில் கோயிலை உருவாக்கி, திருப்பணி செய்த மவுன சுவாமி, காசிசுவாமி, வள்ளிநாயக சுவாமி ஆகியோருக்கு தனித்தனி சமாதிகள் கோயிலின் தென்பகுதியில் கடற்கரையில் உள்ளன.

* இங்கு கோயில் கோபுரமும், பிரதான நுழைவாயிலும் மேற்கு பகுதியில் உள்ளன. காரணம் அடித்தளம் கிழக்கில் மணலாகவும், மேற்கில் உறுதியான பாறையாகவும்
இருப்பதுதான்.

* இங்கே வைகாசி விசாகத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பயனை பெறுவர் என்பது ஐதீகம்.

* ஆறுமுகப்பெருமானுக்கு திருவிழாக் காலங்களில் ஓலையால் ஆன நார்பெட்டிகளிலேயே பிரசாதம் படைக்கப்படுகிறது.

* ஆதிசங்கரர் இந்த முருகனைத் துதித்துதான் ‘சுப்ரமண்ய புஜங்கம்’ இயற்றி தன் காச நோய் நீங்கப்பெற்றார் என்பார்கள்.

* கிரி வீதியின் வடபுறம் ஒரு மணற்பாறையில் வள்ளி குகை அமைந்துள்ளது. நுழைவாயில் உயரம் 4 அடி மட்டுமே. உள்ளே வள்ளியின் சிலை சுவரோடு ஒட்டினாற்போல அமைந்துள்ளது. முருகன் வள்ளியை சிறையெடுத்து வந்து இக்குகையில்தான் ஒளிந்திருக்கச் செய்தாராம்.

* கருவறையில் தவக்கோலத்தில் கடற்கரையாண்டியாக கிழக்கு நோக்கி நின்றபடி காட்சி தரும் மூலவர் 4 அடி உயரம். தவக்கோலம் என்பதால் இருபுறங்களிலும் தேவியர் இல்லை.

* இலை, விபூதி, பிரசாதம் விசேஷம். பன்னிரண்டு நரம்புகள் கொண்ட பன்னீர் மர இலைகளைத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து தருகிறார்கள். இலை நரம்புகள், ஆறுமுகனின் பன்னிரண்டு கரங்களைக் குறிக்கின்றன. விபூதியை, அந்த இலையோடும் அப்படியே உட்கொள்ளலாம்.

* தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பாலதேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

* வள்ளி – தெய்வானை மூலவருக்கு கேரள போற்றிகளும், ஆறுமுகன், நடராஜர், சனீஸ்வரருக்கு சிவாச்சாரியார்களும், வேங்கடாசலப்பெருமாளுக்கு ஆச்சாரியார்களும் பூஜை செய்கின்றனர்.

* 12 அடி உயர தங்க ரதம் 1970ம் ஆண்டில், ஏழு கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகன், ஜெயந்திநாதராக இதில் கிரிவலம் வருகிறார்.

* பொதுவாக தமிழக முருகன் கோயில்களில் ஆவணித் திருவிழா கொண்டாடப்படுவதில்லை. ஆனால் திருச்செந்தூரில் உண்டு.

* திருவிழாக் காலங்களில் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, இளநீர்காவடி, வேல்காவடி, சர்க்கரைக்காவடி, சாம்பிராணிக்காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என பலவகைக் காவடிகளை பக்தர்கள் சுமந்து வருகிறார்கள்.

* திருவிழாவின்போது ஒரே நேரத்தில் இரண்டு உற்சவர்கள் (ஜெயந்திநாதர், குமரவிடங்கன்) எழுந்தருளுதல் தனிச் சிறப்பு. குறவர் மகள் வள்ளியை மணந்ததால் ஆண்டியாகவும் தேவேந்திரன் மகள் தெய்வானையை மணந்ததால் அரசனாகவும் இரு கோலங்களையும் ஒருசேரக் காணும் அரிய தரிசனம்.

* மூலவர் கேரள மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், இன்றும் கேரள முறைப்படி, தரிசனத்திற்கு வரும் ஆண்கள், மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும்.

* மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

* ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

* இந்தத்தலத்தை வீரபாகு ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.

* செந்திலாண்டவன் ஆலயம் (ஓம) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு வாஸ்து, லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

* ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சாரியர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.

* முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வானைக்கும் தனித்தனிச் சந்நதிகள் உள்ளன.

* கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே!

* மேற்கு ராஜகோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும்.

* இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே, அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.

* காலை – திருவனந்தல் முதலாக இரவு – பள்ளியறை வழிபாடு வரை கோயில் திறந்திருக்கும்.

* திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர்.

* ஆறுமுகப் பெருமானின் உற்சவர் குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.

* இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு சாத்திக் கழித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.

* மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவுநேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

* மூலவரின் உற்சவர் – அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில், பாரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை தோழன்சாமி என்பர். வள்ளி – தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர். திருவிழாக்களின்போது சந்திகளில் உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

* உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

* இரவு சுமார் 9.45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை
என்கிறார்கள்.

* அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறுகிறது.

* தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இல்லை.

* ஆவணி, மாசி விழாக்களில் ஏழாம் நாள் மட்டுமே திருவுலா வருவார் சண்முகர். மற்றபடி, ஜெயந்தி நாதரே உலா வருகிறார்.

* மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்.

* மூலவருக்கு போற்றி மடைப்பள்ளியிலும், ஆறுமுகனுக்கு முக்காணியர்கள் மடைப்பள்ளியிலும், வேங்கடாசலப் பெருமாளுக்கு வைணவ மடைப்பள்ளியிலும் தனித்தனியே நைவேத்தியங்கள் தயாராகின்றன.

தொகுப்பு: நாகலட்சுமி

The post திருச்செந்தூரின் கடலோரத்தில்… appeared first on Dinakaran.

Tags : Tiruchendur… ,Tiruchendur ,Murugan ,Suran ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.2.49 கோடி